நான் இப்படித்தான் சென்னை வந்து சேர்ந்தேன்! – சுவாரஸ்யம் பகிர்ந்த சூப்பர் ஸ்டார்!
- ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.
- ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
- நேற்று நடைபெற்ற இப்பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தனது சென்னை பயணத்தை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து இப்பட பாடல்கள் நேற்று வெளியானது.
அந்நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் எப்படி, எப்போது சென்னை வந்தேன் என்ற சுவாரஸ்ய சம்பவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் எனது குடும்பத்தார் மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில வழி கல்விக்கு மாற்றினார்கள். அந்த ஆங்கில வழிக்கல்வி கஷ்டமாக இருந்ததால் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதன்பிறகு அடுத்த வருடம் எழுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். உடனே மேற்படிப்பிற்காக நல்ல வசதியான கல்லூரியில் என்னை சேர்த்தார்கள். நான் ஒழுங்காக படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். தேர்வு நாள் நெருங்கியது தேர்வு கட்டணத்தை செலுத்த 170 ரூபாய் குடும்பத்தார் எனக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நான் தேர்வு எழுதினால் எப்படியும் தேர்ச்சி பெற மாட்டேன் எனக்கு தெரியும். அதனால் அந்த 170 ரூபாயை கொண்டு பெங்களூர் ரயில் நிலையம் வந்து ரயில் ஏறினேன். அந்த ரயில் சென்னை வந்தடைந்தது.
அப்போது எனது டிக்கெட் காணாமல் போனது. ரயில் நிலையத்திலிருந்த டிக்கெட் பரிசோதகர் என்னிடம் டிக்கெட் கேட்டார். நான் டிக்கெட் எடுத்தேன் ஆனால் அது தொலைந்து விட்டது என கூறினேன் அவர் நம்பவில்லை உடனே அருகிலிருந்த சென்னை கூலி தொழிலாளிகள் அந்த பையன் முகத்தை பார்த்தால் பொய் சொல்வது போல தெரியவில்லை. அவன் கண்டிப்பாக டிக்கெட் எடுத்திருப்பான். என எனக்காக அவர்கள் அபராதம் கட்டினார். அந்த கணமே மெட்ராஸ் தான் எனது சொந்த ஊர் என முடிவு செய்தேன். இங்கேயே வேலை செய்ய தொடங்கினேன். என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் சென்னை வந்த பயணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.