உன்னாவ் பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு- உத்திர பிரதேச அரசு அறிவிப்பு
- உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு சாா்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னை தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்னும் இருவர் கடத்திச்சென்று கற்பழித்துவிட்டதாக சென்ற மார்ச் மாதம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு ,கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வந்தார்.மற்றொருவர் தலைமைறைவாக இருந்தார்.இந்த வழக்கின் விசாரணை ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கின் விசாரணைக்காக , பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 5-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.அப்பொழுது அவரை சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி உட்பட 5 பேர் வழிமறித்து தீவைத்தனர்.அந்தப் பெண் உடல் முழுவதும் எறிந்த நிலையில் அலறி துடித்தார்.பின்னர் அருகில் உள்ளவர்கள் அவரை உள்ளூர் மருத்துவமனையில் வைத்து முதலுதவி அளித்தனர்.
பின்னர் அவர் கோட்டாட்சியரிடம் வாக்கு மூலம் அளித்தார்.அந்த வாக்கு மூலத்தில் தன் மீது சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி, ஹரிசங்கர் திரிவேதி ,ராம் திரிவேதி ,உமேஷ் திரிவேதி ஆகிய 5 பேர் தீவைத்தாக கூறினார்.அவர்கள் 5 பெரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.அந்த இளம்பெண் தீக்காயங்களுடன் உயர்சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மருத்துவர்கள் அந்த பெண்ணை காப்பற்ற முயற்சி செய்தனர்.ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணாமாக பலரும் வலுவான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த நிலையில் உயிரிழந்த அந்த பெண்ணுக்கு உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ,25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.