மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும்!மாணவர்களுக்கு எச்சரிக்கை …
ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் சென்னை மின்சார ரெயிலில் பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் சென்று ரகளையில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பட்டாக்கத்திகளை உரசிக்கொண்டு சென்ற 9 மாணவர்கள் ஆயுத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு வருங்காலத்தில் பாஸ்போர்ட், மற்றும் காவல்துறையின் நன்னடத்தை சான்று வழங்கப்படாது என்று காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கெத்து காட்டுவதாக நினைத்து பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் பட்டாக்கத்திகளுடன் ரகளை செய்து பயணிகளை அச்சுருத்திய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் ஆயுத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜி ஜார்ஜ் , யார் பெரியவர் என்ற போட்டியில் மாணவர்கள் கையில் ஆயுதங்களுடன் ரெயிலில் தகராறு செய்தால் அவர்களது எதிர்காலம் கேள்வி குறியாகும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று எச்சரித்தார்.
மாணவர்களின் இந்த விபரீத ஆயுத கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் அவர்கள் படிக்கின்ற கல்லூரி முதல்வர்களை, ரெயில்வே ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
படிகின்ற வயதில் கெத்து காட்டுவதாக நினைத்து ஆயுதத்தை கையில் எடுத்தால் அது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை வீணாக்கி விடும் என்பதை உணர்ந்தாவது இனிவரும் காலங்களில் மாணவர்கள் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.