தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்! 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் – மநீம அறிக்கை
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு பள்ளிப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 10,11,12 வகுப்புகள் மட்டுமின்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு இனி நடைபெறும் என்று அறிவித்தது.இதனால் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.அரசியல் கட்சியினர்,கல்வி ஆர்வலர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனிடையே 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது 8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டடது.
இந்த நிலையில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், தரம் ,தகுதி என்கின்ற வார்த்தை ஜாலங்களை கொண்டு நமது பிள்ளைகளின் அடிப்படை உரிமையான கல்வியினை,அவர்களுக்கு பெருஞ்சுமையாக்கி கல்வியின் மேல் வெறுப்பு வரும் நிலையினைத்தான் இந்த 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்படுத்தும்.எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டது போல் தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள் என்று கூறி புதிய தேர்வு முறையை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.