முதல் டெஸ்ட் : பங்களாதேஷ் சொதப்பல்..! இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி..!
முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதில் முகமது ஷமி 3 விக்கெட்டை பறித்தார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக களமிங்கிய மாயங்க் அகர்வால் இரட்டைசதம் விளாசி 243 ரன்கள் குவித்தார்.இதை தொடர்ந்து இறங்கிய புஜாரா ,ரஹானே , ஜடேஜா ஆகியோர் அரைசதம் விளாசினார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 493 ரன்கள் எடுத்து இருந்தது.களத்தில் ஜடேஜா 60 , உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் இருந்தனர். இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய போது இந்திய அணி கேப்டன் கோலி டிக்ளேர் அறிவித்தார்.பங்களாதேஷ் அணி வீரர் அபு ஜெயத் 4 விக்கெட்டை பறித்தார்.
இதை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சை போல ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை பறிகொடுத்தது. பங்களாதேஷ் அணியில் முஷ்பிகுர் ரஹீம் 64, மெஹிடி ஹசன் 38 மற்றும் லிட்டன் தாஸ் 35 ஆகியோர் ஓரளவு மட்டுமே ரன்கள் அடித்தனர்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.இறுதியாக பங்களாதேஷ் அணி 69.2 ஓவரில் 213 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 உமேஷ் யாதவ் 2 , அஸ்வின் 3 விக்கெட்டையும் பறித்தனர்.