அயோத்தி வழக்கு ! தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கியமான இடங்களில் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், சாதி,மத பூசல்கள் இன்றி அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும்,சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி , தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக அரசு பராமரித்து வருகிறது.அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளை கடந்து , தற்போது உச்சநீதிமன்றம் தன்னுடைய இறுதி தீர்ப்பை இன்று வழங்குகிறது.தீர்ப்பு வர உள்ள நிலையில் ,அனைத்து தரப்பினரும் தீர்ப்பை மதித்து,எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் , தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து,இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்களும் ,அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.