அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார் -மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

Default Image

பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.இதனால் திமுகவினர் அமைச்சரின் சொந்த தொகுதியான ஆவடியில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் அமைச்சரின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.சமூக வலைத்தளமான ட்விட்டரில் அமைச்சருக்கு எதிராக ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன்  என்று பதிவிட்டிருந்தார்.
இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது.அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி , பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்.
பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது.நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம்; அவை எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்