எடியூரப்பாவிற்கு நெருக்கடி!? விஸ்வரூபம் எடுக்கும் ஆடியோ!
கர்நாடக சட்டமன்ற விவகாரம் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான அரசு முதலமைச்சர் எடியூரப்பாவின் ஆடியோவால் புது பிரச்சனையில் சிக்கியுள்ளது.
அதாவது, கர்நாடகவில் குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் ஆட்சி கவிழ காரணமாகியிருந்த ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏக்களுக்கு தற்போது வரும் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாக தகவல் வெளியானது.
அதாவது, காலியாக உள்ள 15 சட்டமன்ற இடங்களில் வேட்பாளரை நியமிப்பது தொடர்பாக கர்நாடக பாஜக சார்பாக கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் எடியூரப்பா ‘ வரும் இடைத்தேர்தலில் ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏக்களுக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், கர்நாடகாவில் பாஜக அரசு அமைய உறுதுணையாக இருந்தது இந்த ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தான். இவர்களை பாஜக தலைவர் அமித்ஷா தான் பதவியேற்பு முடியும் வரை அவரது கட்டுப்பாட்டின் கீழ் பத்திரமாக தங்க வைத்தார். மேலும், அமித்ஷாதான் கர்நாடக இடைத்தேர்தலில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை நிற்க வைக்க ஆலோசனை வழங்கினார்’ என கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளதாக ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.
இந்த ஆடியோவால் பாஜக சார்பாக இடைத்தேர்தல் தொகுதிகளில் இதற்க்கு முன்னர் பொதுத்தேர்தலில் நின்று தோற்ற பாஜக வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இந்த ஆடியோவை ஆதாரமாக கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நான் பேசியது திரித்து தவறாக வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் ஆதாயம் தேடுகிறது’ என தெரிவித்துள்ளார்.