நட்சத்திர விடுதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்!ஆப்கானிஸ்தானில் அட்டூழியம் …..
பிரிட்டனின் டென்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், உலகின் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றான இண்டர் காண்டினெண்டலுக்கு காபூலிலும் கிளை உள்ளது.
இந்த விடுதிக்குள் நேற்றிரவு, துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் சிலர் புகுந்து விருந்தினர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும், அங்கு தங்கியிருந்த பலரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடி வந்தவர்களுள் ஒருவரான உணவு விடுதியின் மேலாளர், 4 பேர் கொண்ட கும்பல், சமையலறை வழியாக நுழைந்ததாகவும், சிலரை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தெரிவித்தார். விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் பலரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து உணவு விடுதிக்குள் நுழைந்த ஆஃப்கன் பாதுகாப்புப் படையினர், தரை தளத்தில் இருந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர். இதனால் உணவு விடுதிக்குள் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூலில் உள்ள விடுதிகளுக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்த நிலையில், தற்போது இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …