இந்த ஆண்டு ஐபிஎல்லில் மிகப்பெரிய போட்டி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடைபெற்று வந்துள்ளது.
இந்தநிலையில், 11-வது சீசன் ஐ.பி.எல். தொடர் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெங்களூரு நகரில் நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முடிவடைந்தது. இதையடுத்து ஐ.பி.எல். ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏலத்தில் பங்கேற்க 1122 வீரர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.ஜோ ரூட், ஹஷிம் ஆம்லா, கிறிஸ் லின், இயன் மோர்கன், மிட்செல் ஸ்டார், பேட் கம்மின்ஸ், டுவைன் பிராவோ, கார்லோஸ் பிரத்வெயிட், எவின் லீவிஸ், ஜேசன் ஹோல்டர், டூ பிளசிஸ், குயின்டன் டி காக், டேவிட் மில்லர், மோர்ன் மோர்கெல், காகிசோ ரபாடா, கேன் வில்லியம்ஸன், காலின் மன்றோ, டாம் லதாம் ஆகிய பிரபலமான வீரர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளன.
281 நட்சத்திர வீரர்கள், 838 பிரபலமல்லாத வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க பெயரைப் பதிவு செய்துள்ளனர். உலகம் முழுதிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் இதில் பங்கேற்க தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், அஸ்வின், ரகானே போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என தெரிகிறது. குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சர்வதேச வீரர்களைப் பொருத்தவரை கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் உள்ளி்ட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. எனவே, அவர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்கிறார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கவுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 282 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 58 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 57 பேரும், வெஸ்ட் இண்டீஸ், இலங்கையில் இருந்து தலா 39 பேரும், நியூசிலாந்தில் இருந்து 30 பேரும், இங்கிலாந்தில் இருந்து 26 பேரும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இருந்து 2 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து ஒரு வீரரும் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைத்திருங்கள் ……