இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்-பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ்தான் உலகின் பழமையான மொழி” என்ற வரலாற்று உண்மையை பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பதை திமுக சார்பில் உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
இந்நேரத்தில், 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்க வேண்டும் என பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/VVDPxWFNVc— M.K.Stalin (@mkstalin) October 1, 2019
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, “உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா. அவையில் உரையாற்றும்போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை.உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும், தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது.
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்த முயற்சியின் முதல்கட்டமாக, அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.