வரலாற்றில் இன்று ஜனவரி 12ம் நாள். 1967 – எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார்…!!
வரலாற்றில் இன்று ஜனவரி 12ம் நாள். 1967 – எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அன்று மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். எம். ஜி. ஆருக்கும் எம். ஆர் . ராதாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி ராதா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் எம். ஜி. ஆரை சுட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவரது இடது காதருகே சுடப்பட்டார். துப்பாக்கி குண்டு அவரது தொண்டையில் பாய்ந்தது. இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும். எம் ஆர். ராதா மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராதாவுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் அது மூன்றரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
தொண்டையில் குண்டு பாய்ந்ததன் காரணமாக எம். ஜி. ஆரின் குரல் உச்சரிப்பில் மாற்றம் ஏற்பட்டது. எனினும் அவர் தனது சொந்த குரலிலேயே தொடர்ந்து திரைப்படங்களில் பேசி நடித்தார்.
அதன் பின்னர் தந்தை பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர். அப்போது எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரிடம் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.