போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்த புகார்கள்!ஆய்வு செய்ய சிறப்பு குழு…
போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு என புகார் எழுந்தால், அதுகுறித்து விசாரிக்கும் வகையில் தனியாக பதிவேடு ஒன்றைப் பராமரிக்க வேண்டும் என 2011ம் ஆண்டு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். போலி ஆவணப்பதிவு எனத் தெரிய வந்தால் மாவட்ட பதிவாளர்கள் விசாரணை நடத்தி, பத்திரப் பதிவை ரத்து செய்யும் நடைமுறை இருந்து வந்தது.
இந்நிலையில், பத்திரப்பதிவில் முறைகேடு இருந்தால், பதிவாளர்களே விசாரணை நடத்தி ரத்து செய்யக்கூடாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, போலி ஆவண பதிவு தொடர்பான புகார் மனுக்களை மாவட்ட பதிவாளர்கள் விசாரிக்க கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களுக்காக பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பத்திரப்பதிவு துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அவர் நியமித்துள்ளார்.
போலி ஆவண பதிவு தொடர்பாக அந்தந்த மாவட்ட பதிவாளருக்கு வந்த புகார்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு செய்து வருகிற 25ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய பதிவுத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
2011 முதல் 2017 வரை பராமரிக்கப்பட்டு வந்த புகார் பதிவேடு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் பராமரிக்கப்படும் புதிய பதிவேடு ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு மேற்கொள்ளும். அப்போது, மாவட்ட பதிவாளர்கள் எடுத்த நடவடிக்கை விதிமீறல் எனத் தெரிய வந்தால் அவர்கள் மீது துறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பதிவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com