தோல்வியில் இருந்து மீள முடியாத தெலுங்கு டைட்டன்ஸ்…!
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 39-32 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்ற யு.பி. யோதா அணி 15 புள்ளிகளுடன் “பி’ பிரிவில் 3-ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி 6-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஆமாதாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே தெலுகு டைட்டன்ஸ் இரு புள்ளிகளைப் பெற்றது. 10-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா அணி ஸ்கோரை (6-6) சமன் செய்தது. 12-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா 7-6 என முன்னிலை பெற, தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி தனது அபார ரைடின் மூலம் 4 புள்ளிகளைக் கைப்பற்றினார். இதனால் அந்த அணி 10-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் யு.பி.யோதா அணி 14-13 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் 3 புள்ளிகளைப் பெற்ற தெலுகு டைட்டன்ஸ் அணி 16-14 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு யு.பி.யோதா அணி சூப்பர் டேக்கிள் மூலம் 17-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதற்குப் பதிலடியாக 28-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா அணியை ஆல்அவுட்டாக்கிய தெலுகு டைட்டன்ஸ் 24-22 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு அபாரமாக ஆடிய யு.பி.யோதா ரைடர் நிதின் தோமர் 3 புள்ளிகளைப் பெற்றுத்தர, அந்த அணி 28-26 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நிதின் தோமர் ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற, தெலுகு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட்டானது. இதனால் யு.பி.யோதா அணி 36-29 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசிக் கட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் கடுமையாகப் போராடியபோதும், தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இதனால் யு.பி.யோதா அணி 39-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
யு.பி.யோதா தரப்பில் நிதின் தோமர் தனது அபார ரைடின் மூலம் 10 புள்ளிகளைப் பெற்றுத்தந்தார். அதேநேரத்தில் தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி 12 புள்ளிகளைப் பெற்றுத் தந்த போதிலும், வெற்றி பெற முடியாமல் போனது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
குஜராத் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 29-25 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியைத் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டங்கள்
பாட்னா பைரேட்ஸ்-யு.பி.யோதா, நேரம்: இரவு 8
குஜராத்-ஜெய்ப்பூர், நேரம்: இரவு 9
இடம்: ஆமதாபாத், நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்