மறைந்த சுபஸ்ரீ குடும்பத்திற்க்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கமல்ஹாசன்!
சில தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சுபஸ்ரீ எனும் பொறியியல் பட்டதாரி பள்ளிக்கரணை பிராதன சாலையில் வந்து கொண்டிருக்கையில் சாலையோரம் இருந்த பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ நிலை தடுமாறி, கீழே விழுந்தார்.
அந்த சமயம் பின்னால் வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கட்சித்தலைவர்கள், திரை நடிகர்கள் தங்கள் தொண்டர்களையும், ரசிகர்களையும் பேனர் வைக்க இனி வேண்டாம் என கூறி வருகின்றனர்.
இதில் இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர், பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இறந்துபோன சுபஸ்ரீ வீட்டிற்கு நேரில் சென்று தனது அஞ்சலி செலுத்தி, அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.