ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் தயார் : டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன் : வட கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை முழு ஆயுத பலத்துடன் குறிவைத்து விட்டதாகவும், ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.சமீப காலமாக வடகொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது . மேலும், பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழு ஆயுத பலத்துடன் தயார் நிலையில் இருக்கிறோம். வடகொரியா அறிவீனமாக நடந்து கொள்ள முயற்சித்தால் அதற்கான மாற்றுப் பாதையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குவாம் ஆளுநர் குவாம் எட்டி பசா கால்வோவை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினார் . அமெரிக்கா 1000 சதவிதம் குவாம் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
மக்களை தைரியமாக இருக்க சொல்லுங்கள் என்று குவாம் ஆளுநர் எட்டியிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டார். இதனால், வட கொரியா – அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் வலுவடைந்து வருவதாகவும், விரைவில் இருநாடுகளும் தங்களது ஆயுத பலத்தை பரிசோதிக்க முயலக்கூடும் என்றும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.