தனியார் நிறுவன இயக்குனர் விவகாரம் அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!
சமீபத்தில்’ தி வயர்’ இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. அமித்ஷா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது மற்றொரு பூதம் வெளிவந்துள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் ஷவுர்யா தோவால் நடத்திவரும் இந்தியா ஃபவுண்டடேஷன் அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இயக்குநராகவும்,பங்குதாரராகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘தி வயர்’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ”இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து அதிகமான அளவில் ஸ்பான்ஸர் பெறுகிறது.வெளிநாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர் பெற்று நடத்தப்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சரே இயக்குநராக இருப்பது, விதிமீறல் இல்லையா?.
இந்நிறுவனத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல மேலும் மூன்று அமைச்சர்கள் இயக்குநர்களாக உள்ளனர். வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஆகியோரும் இந்நிறுவனத்தின் பிற இயக்குநர்கள்.மேலும் அவர்களோடு பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராம் மாதவ் வாரணாசியும் இயக்குநராக உள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஷவுர்யா தோவால் நிறுவனத்துடன் மத்திய அமைச்சர்கள் கொண்டுள்ள வியாபாரத் தொடர்புகுறித்து, தி வயர் விளக்கம் கேட்டதாகவும், அமைச்சர்களிடம் இருந்து செய்தி வெளியிடும் வரை எந்தப் பதிலும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன், இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளதோடு, பணப் பரிவர்த்தனையும் கொண்டுள்ள அறக்கட்டளை இது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன், புதுடெல்லி ஹேலே சாலையில் உள்ள டோனி அடுக்குமாடிக் குடியிருப்பில் நிர்மலா சீதாராமன் வசித்துவந்தார். 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரானதால், அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தியா ஃபவுண்டேஷன் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.
பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின்போது, இந்தியர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். நியூயார்க் பயணத்தின்போது, மேடிசன் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சி, சான்பிரான்ஸிஸ்கோவில் சிலிக்கான்வேலி நிறுவனங்களின் இந்தியத் தலைவர்களுடன் மோடி பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி, பிரான்ஸ் சுற்றுப்பயணம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை இந்நிறுவனம்தான் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசிடமும் பிரதமரிடமும் அஜித் தோவாலுக்குள்ளச் செல்வாக்கை தனக்கு சாதகமாக ஷவுர்யா தோவால் பயன்படுத்தியுள்ளார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.
பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலர் மகன் நடத்திவரும் அறக்கட்டளையில் மத்திய அமைச்சர்களே இயக்குநர்களாக இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.