அவசரத் தேவைக்கு விமானங்களில் உணவு அளிக்க மறுப்பதா?: எம்.பி.க்கள் குழு கேள்வி…….

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, விமானங்களில் வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 29 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் விமானத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
 அறிக்கையில் ,‘‘குறிப்பிட்ட தனியார் விமானங்களில் வழங்கப்படும் உணவு மிக மோசமாக உள்ளது. இதன் தரத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். அதுபோலவே பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் மெனுவும் ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றை மாற்றி வழங்க வேண்டியது அவசியம்.
எனினும் சில விமான நிறுவனங்கள் ஒரளவு தரமான உணவை வழங்கி வருகின்றன. அந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரிய அளவில் புகார்கள் கூறவில்லை. இதுமட்டுமின்றி சில விமானங்களில் தண்ணீர் மற்றும் உணவின் விலை மிக அதிகமாக உள்ளது.
சில விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்தால் மட்டுமே உணவை வழங்குகின்றன. சர்க்கரை நோயாளி உள்ளிட்டோர் அவசரத்திற்காக கேட்டாலும், முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. விமான பயணத்தின் போது திடீரென உணவு தேவை ஏற்படும்போது பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விமானப் பயணத்திற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின் உணவு தேவையென்றால் கிடைப்பதில்லை. எனவே விமான நிறுவனங்கள் நோயாளிகள் உள்ளிட்ட அவசர தேவைக்கு உணவு வழங்க வசதிகள் செய்து தர வேண்டும். இது மிகவும் அவசியம்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment