முதல்வரை 420 என்பதில் எனக்கு பயம் இல்லை டிடிவி தினகரன் பேட்டி
தமிழக முதல்வரை 420 என்பதில் எனக்கு எந்தவிதப் பயமும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பாக நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக திங்கள் அன்று மதுரை வந்துள்ள தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
‘தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பிரமாணப்பத்திரத் தில் என்னை துணைப் பொதுச்செயலாளராக ஏற்றுக் கையெழுத்திட்டுவிட்டு இன்று, வேறு மாதிரி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கழகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் செயலாகும்.தேர்தல் ஆணையத்திடம் ஒன்று கூறிவிட்டு, தற்போது வேறுவிதமாகப் பேசுகின்ற தமிழக முதல்வரை 420 என்று கூறுவதற்கு எனக்கு எந்தவிதப் பயமும் இல்லை. யாரைப் பார்த்தும் நான் பயப்பட வேண்டிய அவசியமுமில்லை.
தற்போதுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களோடு தொடர்பில் உள்ளனர். அதிமுகவிலுள்ள சில சுயநலக்காரர்கள் கட்சித் தொண்டர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். எங்களுக்கு ஆதரவாக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சிப் பணியில் ஓரவஞ்சனை காட்டுகிறது தற்போதைய தமிழக அரசு.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நிச்சயமாக இரட்டை இலையுடன்தான் சந்திப்போம். அதிமுகவை ஒன்றுபடுத்தி, வெற்றி பெறுவோம்’ என்றார்.