கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி !
இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் , ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் தவான் 2 ரன்னில் வெளியேற பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார்.
நிதானமாக விளையாடி ரோகித் சர்மா 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடிய விராட் கோலி 125 பந்தில் 120 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 279 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கார்லோஸ் 3 விக்கெட்டையும் பறித்தார். 280 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ் , கிறிஸ் கெய்ல் இருவரும் களமிறங்கினர்.
தொடக்கத்திலே கிறிஸ் கெய்ல் 11 ரன்னில் வெளியேறினார்.பின்னர் இறங்கிய ஷாய் ஹோப் 5 , ஷிம்ரான் ஹெட்மியர் 18 ரன்களில் வெளியேற ,நிதனமாக விளையாடிய தொடக்க வீரர் எவின் லூயிஸ் 65 ரன்கள் குவித்தார். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் 46 ஓவராக குறைக்கப்பட்டு 270 ரன்கள் இலக்காக வைத்தனர்.
பிறகு மத்தியில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சிறப்பான ஆட்டத்தால் 42 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 210 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டையும் , முகமது ஷமி ,குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.இந்நிலையில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளது.