நோ என்றால் நோ தான்! தரமான சம்பவம் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை!
தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்து உள்ளார். யுவன் இசையமைத்து உள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்துள்ள திரைப்படம்.
இப்படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றியும், அதிர்வலையும் ஏற்படுத்திய திரைப்படம் பிங்க். அந்த படத்தின் தமிழ் ரீமேக், அமிதாப் ரோலில் அஜித் நடித்துள்ளார். பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை பற்றிய திரைப்படம் என எல்லாம் தெரியும்.
இந்த மாதிரியான கதைக்களத்தை மாஸ் ஹீரோ அஜித் தேர்ந்தெடுத்து சமூகத்திற்கு தற்போது தேவையான கருத்தை முன்வைக்க வேண்டும் என நினைத்ததற்கே தல அஜித்தை பாராட்டலாம்.
இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் இன்னோர் நடிகை ஆகிய மூவரும் மார்டன் பெண்கள். இவர்கள் தங்கள் விருப்பப்படி வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் சில இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த சம்பவத்தின் வீரியத்தை உணர்ந்து அஜித் அதனை கையில் எடுத்து வாதாடுகிறார்.
படத்தின் மிக பெரிய பலமே வினோத் எழுதிய வசனங்கள் தான். ஒவ்வொரு வசனமும் அவ்வளவு ஷார்ப். நேர்த்தி. அதனை அஜித் ஒவ்வோர் இடத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் கூறும்போது அரங்கமே அதிர்கிறது. முக்கியமாக ஒரு பெண் எப்படி இருந்தாலும் அவர் நோ சொன்னால் நோ தான் அதுதான் அவளது உரிமை. அதனை மீறுவது மிகப்பெரிய குற்றம் என பதிவிடும் இடம் எல்லாம் சூப்பர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடைபெற்றாலும் படத்தின் வசனம், அஜித் எனும் திரை ஆளுமை, அவர் பேசிடும் கூர்மையான வசனங்கள், யுவன் இசை, ஒளிப்பதிவு என ரசிகர்களை கதை களத்தை விட்டு மீறாமல் கட்டிபோடுகிறது.
தற்போது சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் உடைய கதைக்களத்தை தேர்வு செய்து அதில் அஜித் எனும் மாஸ் ஹீரோவை நடிக்க வைத்து அனைவரது மனதிலும் நன்கு பதிவு செய்துள்ளது படத்தின் கூடுதல் சிறப்பு. கண்டிப்பாக இப்படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது சமூகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.