உன்னாவ் வழக்கு :பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டதாகவும், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய், உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி அந்த பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.