7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தார் தொல்.திருமாவளவன்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான, பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையில் உள்ளார்.
அவர்களின் விடுதலைக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் கடந்த நிலையில், ஆளுநர் கையெழுத்திடாததால் தீர்மானத்தை செயல்படுத்த முடியாமல் உள்ளது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், தமிழக எம்பி ரவிக்குமார், பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள் ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தனர்.
இந்த சந்திபில், தமிழக அரசின் தீர்மானம், ஆளுநர் நடவடிக்கை பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்புகளுடன் மனு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
மாநில ஆளுநர்கள் அனைவரும் உள்துறை அமைச்சர்களின் ஆலோசனை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுப்பதாலும், மாநில ஆளுநர்களின் நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சர் கவனித்து ஆலோசனை வழங்குவதாலும், மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.