அதிமுக அரசின் சாதனையை சொல்ல 3 மணிநேரம் காணாது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் அதிமுக அரசாங்ககம் செய்த சாதனைகளை சொல்லி முடிக்க 3 மணி நேரம் பத்தாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா காரணமாக நடைபெறாமல் இருந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர்ஆனந்த் , அதிமுக சண்முகம் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது, வேலூரில் அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
இன்று அதிமுக வேட்பாளராக இருக்கும் சண்முகத்தை ஆதரித்து , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இல்லாத சூழலில் ஸ்டாலின் அவர்கள் எதனை நம்பி வாக்குறுதி தருவார் என்று திமுகவை விமர்ச்சித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அதிமுக அரசில் கிராமங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை இலவச மின்சாரம் தரப்பட்டுள்ளதாகவும் , நாள்தோறும் 14,000 மெகா வாட் மின்சாரம் எந்தவித தடையுறும் இன்றி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 45 லட்சம் மடிக்கணிகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் விஞ்ஞானிகள் அதிகம் கொண்ட மாநிலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.இப்படி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ள நிலையில் அவற்றை கூற 3 மணி நேரம் காணாது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.