துலாம் ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….
துலாம் ராசி நேயர்களே!
தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்களே! 3-ம் வீட்டில் சனி பகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுத்தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்வீர்கள்.
சொந்த ஊரில் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், இந்த 2018-ம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டில் குடிநீர்க் குழாய், கழிவுநீர்க் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சாரச் சாதனப் பழுது வந்து செல்லும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.
அவ்வப்போது கழுத்து வலி, தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து போகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பழைய பிரச்சினை ஒன்று முடிந்தது என்று பெருமூச்சுவிடும் நேரத்தில் அடுத்த சிக்கல் ஒன்று புதிதாகத் தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு வரும். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு ராசிக்கு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள்.
மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருந்த நிலை மாறும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் உங்கள் வளர்ச்சி கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். உங்களுடைய ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்ரனும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விலை உயர்ந்த லேப்டாப், மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்குவீர்கள். வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும் சனியும் சேர்வதால் பணவரவு அதிகரிக்கும்.
10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனியும் சேர்வதால் நீண்ட நாளாகப் புதுப்பிக்கப்படாமலிருந்த குலதெய்வக் கோயிலைச் சொந்தச் செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக்கடனையும் முடிப்பீர்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன், கேது சேர்வதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 3.3.2018 முதல் 28.3.2018 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். இந்தாண்டு முழுக்க ராகு பகவான் 10-ம் வீட்டிலும் கேது ராசிக்கு 4-ம் இடத்திலும் இருப்பதால் கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். வீட்டில் குடிநீர்க் குழாய், கழிவுநீர்க் குழாய் அடைப்பு என்று அடுக்கடுக்காக செலவுகள் வரும். மின்சார, சமையலறைச் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
வியாபாரத்தில் 3-ம் வீட்டில் சனி நிற்பதால் தைரியமாகப் புதிய முதலீடுகள் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பொறுப்பு, பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும், அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். நீங்கள் விடுப்பில் இருக்கும் நாட்களில் அலுவலகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.
இந்தப் புத்தாண்டு அதிரடி முன்னேற்றங்களையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: வேலூர் மாவட்டம், வள்ளிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியையும் ஸ்ரீவள்ளியையும் சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டு உங்களுக்குக் கைகொடுத்து மேலேற வைக்கும்.
source: dinasuvadu.com