50-களில் மலரும் காதல்
காமம் கடந்த காதல்! ஐம்பதுகளில் ஜோடிகள் அன்னப்பறவையாக இருப்பார்கள். காதலில் காமத்தை பிரித்து எடுத்து, காதலை மட்டுமே பருகிக் கொண்டிருப்பர். ஐம்பதுகளில் காமத்திற்கு வேலை இல்லை. அதன் பால் சார்ந்த ஆசைகள் அறவே இருக்காது. முழுக்க, முழுக்க தன் துணை, அவர் அரவணைப்பு, அன்பு மட்டுமே பெரிய எதிர்பார்ப்பாக காணப்படும்.
நினைவுகளின் உயிரோட்டம்! இருபதுகளில் துவங்கி, அறுபதுகளை எதிர்கொண்டு நடைப்போட்டுக்கொண்டிருக்கும் பெருசுகளின் காதல் சொகுசானது. அதில் எள்ளிநகையாட நிறைய நினைவுகள் இருக்கும். கண்ணீர் சிந்திய நினைவுகள் கூட வாய்விட்டு சிரிக்க வைக்கும். வாய்விட்டு சிரித்த நினைவுகள் கூட கண்ணீர் சிந்த வைக்கும்.
முடிவிலி பயணம்! இளம் வயதில் நமது முடிவு எப்படி இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். முடிவை நெருங்கும்போது அது எப்போது வந்தால் என்ன என்ற உணர்வு மட்டுமே இருக்கும். முடிவை மறந்த ஒரு முடிவில் பயணமாக அந்த காதல் உறவு நடைப்போடும்.
மிச்ச சொச்ச அச்சங்கள்! இல்லறத்தில் துவக்கத்தில் எப்படி வாழ்வோம், எப்படி வளர்வோம் என பல அச்சங்கள் இருக்கும். ஆனால், ஐம்பதுகளில் நமது பிள்ளைகள் எப்படி இருப்பார்கள், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே அச்சம் தான் தம்பதிகள் மத்தியில் இருக்கும்.
பிரியா விடைக் கொடு தோழி! ஐம்பதுகளில் நடைப்போடும் போது தம்பதி இருவர் மத்தியிலும் இருக்கும் ஆசை, எனக்கு முன் நீ இறந்துவிட வேண்டும். எனக்கு பிறகு உன்னை யார் நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற அச்சம் கலந்த கேள்வி எழும். பிரியா விடை யார் கொடுப்பது என்ற போட்டியும் இருக்கும். ஒன்றாக இறந்துவிட்டால் பெரிய பாக்கியம் என்று கூட கருதுவர்.
விட்டு பிரியும் பிள்ளைகள்! ஐம்பதுகளில் பதவி, பணம், சொத்து பிரிந்தால் வரும் வலியை விட, சொந்தங்கள், பிள்ளைகள் நம்மை விட்டு பிரியும் போது வரும் வலி தான் கொடுமையானதாக இருக்கம். இந்த ஒரு தருணம் மட்டும் தங்கள் வாழ்வில் நடந்துவிட கூடாது என்பதே அவர்களது முழுநேர வேண்டுதலாக இருக்கும்.
உன் துணை மட்டுமே உறுதுணை! இளமை காலத்தில் எல்லாருடைய துணையும் தேடுவோம். நண்பர், உறவுகள் யாரேனும் ஒருவர் பிரிந்தாலும் மனதில் ஒரு சோகம் எழும். ஆனால், ஐம்பதுகளில் உண்மையான உறவுகள் மட்டுமே உங்கள் அருகில் நிலைத்திருக்கும். அந்த வயதில் யார் வந்தால் என்ன, சென்றால் என்ன? நீ மட்டும் என்னுடன் இரு எந்நேரமும் என்ற கூக்குரல் மனதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்!
கைத்தடி எதற்கடி! காமம் கடந்த காதலில் தான் ஓர் உறவின் உன்னதத்தை நாம் முழுவதுமாக உணர முடியும். நாடி, நரம்பு தளர்ந்து பிறகு, கைத்தடியை நம்பாமல், முதிர்ந்த ஜோடி, இருவர் கைகோர்த்து ஒருவருக்கு ஒருவர் பலம் சேர்த்து நடைபோடுவதில் இருக்கிறது மெய் காதல்.
முதிர்ந்தாலும் உதிரா காதல்! முடி நரைத்தாலும், இளமை இழந்தாலும், வலிமை குறைந்தாலும், நாடி, நரம்பு தளர்ந்தாலும்… ஐம்பதில் துளிர்விடும் காதலின் இணைப்பு மட்டும் வலுவிழக்காது, நொடி பிரியாது. ஐம்பதுகளில் உங்கள் துணையை காதலிக்கும் தருணம் கிடைத்தால், அதுதான் நீங்கள் செய்த பெரிய பாக்கியம்.
நூலிழை! நூலிழை பிரிவும் பூகம்பமாய் தோன்றும். ஆடி மாதத்தில் பிரிந்திருப்பதை காட்டிலும், ஐம்பதுகளில் பிரிந்திருப்பது கொடியது என கூறலாம். ஐம்பதுகளில் மனதில் உருவாகும் காதல் உண்மையானது மட்டுமல்ல, உன்னதமானதும் கூட. நோய்நொடி அற்ற ஆயுள் கொஞ்சம் ஐம்பதிகளில் கிடைத்தால், ஐம்பதுகளின் காதலை கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு நிம்மதியாக உயிரை விடலாம்.