தூத்துக்குடி இரட்டைக் கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

Default Image
தூத்துக்குடியில் இரட்டைக் கொலை சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை பறிக்க முயன்ற கொலையாளி உட்பட 7பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜெயலிங்கம் (60) என்பவர் இரும்புக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சேர்ந்த பண்டாரம் (55) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 9.45 மணி அளவில் ஜெயலிங்கம் தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது கடையின் அருகில் உள்ள வாறுகால் பகுதிக்கு சென்றார். அப்போது 4 மோட்டார் பைக்குகளில் வந்த 7 பேர்கொண்ட கும்பல் திடீரென்று தாங்கள் வைத்து இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஜெயலிங்கத்தை சராமரியாக வெட்டினார்கள். 

அவரது அலறல் சத்தம் கேட்டு கடையின் முன்பு நின்ற பண்டாரம் ஓடி வந்தார். அவர் தனது முதலாளி வெட்டுப்படுவதை தடுக்க முயன்றார். அந்த கும்பல் பண்டாரத்தையும் சரமாரியாக வெட்டியது. கும்பலின் கொலை வெறித்தாக்குதலில் ஜெயலிங்கம், பண்டாரம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் பைக்குகளில் தப்பிச் சென்றுவிட்டது. தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன், ரூரல் டிஎஸ்பி சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 

கொலை செய்யப்பட்ட ஜெயலிங்கம், பண்டாரம் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சொத்து விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ஜெயலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த சுப்பையாபாண்டியன் மகன் ராஜேந்திரன் (50) என்பவர் குடியிருந்து வந்துள்ளார். அவரை வீட்டை காலி செய்ய சொன்னபோது, போலி ஆவணங்கள் தயாரித்து, இந்த இடத்தை என்னிடம் வாங்கிய ரூ.5லட்சம் கடனுக்காக உனது தந்தை இந்த வீட்டை என்னிடம் விற்றுவிட்டார் என்று ஜெயலிங்கத்திடம் ராஜேந்திரன் கூறினாராம். 

இது தொடர்பாக ஜெயலிங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ஜெயலிங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. மேலும், ராஜேந்திரன் வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினர் உதவியுடன் ராஜேந்திரன் வீட்டிலிருந்து காலி செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது நண்பர்கள் 7பேருடன் சேர்ந்து ஜெயலிங்கத்தை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்றதால் அவரது கடையில் வேலைபார்த்த பண்டாரம் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன் உட்பட 7பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் நேற்று இரவில் நடந்த இந்த இரட்டைக்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்