டிஎன்பிஎல் புதிய சாம்பியனானது சேப்பாக்..!!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிறகு கௌஷிக் காந்தி 19 பந்துகளில் 24 ஓட்டங்கள், அபிநவ் முகுந்த் 38 பந்துகளில் 41 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார். எஸ்.பி. நாதன் 16 ஓட்டங்களில் அவுட்டானார்.
இறுதியில் தூத்துக்குடி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சூப்பர் கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோர், அருண் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய சூப்பர் கில்லீஸ் அணியில் கோபிநாத் – தலைவன் சற்குணம் இணை முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 46 ஓட்டங்கள் சேர்த்தது. தலைவன் சற்குணம் 16 ஓட்டங்கலில் ஆட்டமிழந்ததையடுத்து களம்புகுந்த விக்கெட் கீப்பர் எஸ்.கார்த்திக் 16 ஓட்டங்களில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அந்தோணி தாஸ் 4 ஓட்டங்களில் அவுட்டாக கேப்டன் சதீஷ் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கோபிநாத் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் சதீஷுடன் இணைந்தார் சரவணன். அதிசயராஜ் பந்துவீச்சில் சதீஷ் இரு சிக்ஸர்களை விளாச, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 22 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, 19-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார்.
அதில் முதல் பந்தில் பைஸ் மூலம் 4 ஓட்டங்கள், அடுத்த இரு பந்துகளில் 3 ஓட்டங்கள், அடுத்த 3 பந்துகளில் சரவணன் இரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாச, சூப்பர் கில்லீஸ் 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
சரவணன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.