நாமக்கல்லில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இயங்கி வரும் பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் கரும்பு நிலுவைத் தொகையை கேட்க வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால், ஆலை முன்பு அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் அருகேயுள்ள ஓடப்பாளையம் பகுதியில் பொன்னி சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.
இந்த ஆலை கரும்பு டன் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலையான 2ஆயிரத்து 600 ரூபாயில் 300 ரூபாயை பிடித்தம் செய்துகொண்டு 2 ஆயிரத்து 300 ரூபாயை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய 58 கோடி ரூபாய் பாக்கித் தொகையை தராமல் இழுத்தடித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் தொகையைக் கேட்டு கடந்த 2ஆம் தேதி விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் அந்த மனுகுறித்து ஆலை நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை ஆலைக்குள் நுழையவிடாமல் காவல்துறையினர் தடுத்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து விவசாயிகள் ஆலை முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராவிட்டால், அடுத்த பருவத்துக்கு ஆலைக்கு கரும்புகளை அனுப்பமாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
source: dinasuvadu.com