ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய பங்களாதேஷ்!
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது . இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், லிட்டன் தாஸ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடி இருவரும் ரன்கள் சேர்த்தனர். லிட்டன் தாஸ் 5-வது ஓவரில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்க தமீம் இக்பால் , ஷாகிப் அல் ஹசன் இருவரும் சேர்ந்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர். பின்னர் 17-வது ஓவரில் தமீம் இக்பால் 36 ரன்னில் வெளியேற நிதானமாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன் அரை சதத்தை நிறைவு செய்தார்.
பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன் 51, சௌம்யா சர்க்கார் 3 , மஹ்மதுல்லா 27 , முஷ்பிகுர் ரஹீம் 83 ரன்களுடன் வெளியேறினர்.இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டையும் , குல்படின் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
263 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குல்படின்,
ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவருமே நிதானமாகவும் ,சிறப்பாக விளையாடினர்.
நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா 11-வது ஓவரில் 24 ரன்னுடன் வெளியேறினார். பிறகு களமிறங்கிய ஹஷ்மதுல்லா பவுண்டரி , சிக்ஸர் ஏதும் அடிக்காமல் 31 பந்திற்கு 11 ரன்னில் அவுட் ஆனார்.சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் குல்படின் 75 பந்தில் 3 பவுண்டரி அடித்து 47 ரன்னில் வெளியேறினார்.
பிறகு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இறுதியாக ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் 200 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டை பறித்தார்.இந்நிலையில் 7 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு பங்களாதேஷ் அணி முன்னேறியது.