பின்வாங்கியது ரயில்வே !பழைய நடைமுறையே தொடரும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு
தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என்றும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்று தெற்கு ரயில்வே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை திருமங்கலம் அருகே ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு காரணம் மொழி பிரச்சினைதான் என்று விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்,தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க, தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என்றும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் ரயில்வே உத்தரவை உடனடியாக திரும்பப்பெற கோரி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு உள்ளிட்டோர் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.
இதன் பின் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் கூறுகையில், தவறுதலாக கொடுத்த ஆர்டரை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளார். எந்த மொழியிலும் பேசலாம் என திமுகவினரிடம் ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.