தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு!உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரலுடன் 5 ஆண்டுகால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதியத்தை அனுப்பாமல் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது.ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.