ஆதிக்கத்தை தொடருமா ரோஹித் சர்மா குழு?கட்டாக்கில் முதல் டி 20….

Default Image

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது. மீண்டும் ஒரு முறை ஆதிக்க அளவிலான ஆட்டத்தை மேற்கொள்ள இந்திய அணி தயாராகி உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எளிதாக கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டித் தொடரை வழக்கமான கேப்டனான விராட் கோலி இல்லாத நிலையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் சற்று மெனக்கெடுதலுடன் 2-1 என வசப்படுத்தியது. இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் டி 20 தொடரை சிறப்பான முறையில் அணுகுவதற்கு ஆயத்தமாகி உள்ளது இந்திய அணி.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி தரம்சாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே பந்து வீச்சில் அசாத்திய திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. ஆனால் மொகாலியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி ஆக்ரோஷமாக மீண்டெழுந்து பதிலடி கொடுத்தது. எனினும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைத்தது.

ஆனால் அந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி 215 ரன்களில் சுருண்டிருந்தது. 22 ஓவர்கள் வரை ரன் குவிப்பு விகிதத்தை சராசரியாக ஓவருக்கு 6 என இலங்கை அணி வைத்திருந்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் துல்லியமான ஸ்டெம்பிங்கால் தூண்டப் பெற்ற இந்திய அணி அதன் பின்னர் விரைவாக செயல்பட்டது. சுழல் கூட்டணியான குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர்.

இருப்பினும் டி20 ஆட்டம் என்பது ஒருநாள் போட்டியின் வடிவத்தில் இருந்து மாறுபட்டது. மேலும் போட்டி நடைபெறும் பாராபத்தி மைதானத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 ஆட்டம் இந்திய அணிக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி வெறும் 92 ரன்களில் ஆட்டமிழந்திருந்தது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இதனால் இம்முறை இந்திய அணி டி 20 தொடரை சிறப்பான முறையில் தொடங்க வேண்டும். அதேவேளையில் இந்த வடிவிலான கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளது. இரு அணிகளும் 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிய நிலையில் இந்தியா 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதிலும் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்விகளை சந்திக்கவில்லை.

டி 20 தொடரில் இந்திய அணியின் ரன்குவிப்பு கேப்டன் ரோஹித் சர்மாவை பெரிதும் நம்பியிருக்கக்கூடும். ஷிகர் தவணுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். கேப்டன் பதவி பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்த போதிலும் அடுத்த ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது, கடைசி ஆட்டத்திலும் அணியை சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வென்றது என தனது பணியை ரோஹித் சர்மா திறம்பட செய்தார்.

டி 20 தொடரிலும் சிறந்த திறனை வெளிப்படுத்த அவர், முனைப்பு காட்டக்கூடும். மிடில் ஆர்டர் மற்றும் பின்கள பேட்டிங் வரிசையின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றால் சிறப்பான தொடக்கம் அமைவது முக்கியமானதாக இருக்கும். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டி 20 ஆட்டம் ஒன்றில் தனது திறமையை சந்தேகத்துக்குள்ளாக்கியிருந்த தோனியின் மீது அதிக கவனம் திரும்பி உள்ளது.

இந்தத் தொடரில் அறிமுக வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பசில் தம்பி, தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சவுராஷ்டிராவை சேர்ந்த ஜெயதேவ் உனத்கட் ஒரு வருடத்துக்கு பிறகு அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அவர், கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் விளையாடியிருந்தார்.

பரோடாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான தீபக் ஹூடா, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் அதி விரைவாக சதம் (108 ரன்கள்) அடித்தார். உள்ளூர் தொடரில் விரைவாக அடிக்கப்பட்ட 4-வது சதமாகவும் இது அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் தீபக் ஹூடா களமிறங்குவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஒருவேளை அவர், களமிறங்கினால் தினேஷ் கார்த்திக் அல்லது மணீஷ் பாண்டே வாய்ப்பு பறிபோகும்.

வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கூடுதல் பொறுப்பை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் அறிமுக கேரளாவைச் சேர்ந்த பசில் தம்பி இடம் பெறக்கூடும். தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை கையாளும் திறன் கொண்ட அவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார். குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக திகழ்வதால் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான்.

இலங்கை அணி தொடர்ச்சியாக 5 டி 20 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடரை தற்போது அணுகுகிறது. பேட்டிங்கில் உபுல் தரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரை மட்டுமே அணி பெரிதும் நம்பி உள்ளது. நிரோஷன் திக்வெல்லா உள்ளிட்ட வீரர்கள் நடுக்களத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கினால் இந்திய அணிக்கு எதிராக போராடலாம். தரம்சாலா போட்டியை தவிர மற்ற இரு ஆட்டங்களிலும் இலங்கை அணியின் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மலுக்கு டி 20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு கூடுதல் அழுத்தத்தையே ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, பும்ரா, முகமது சிராஜ், பாசில் தம்பி, உனத்கட்.

இலங்கை: திசாரா பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, மேத்யூஸ், குசால் பெரேரா, குணதிலகா, திக்வெலா, குணரத்னே, சதீசமரவிக்ரமா, ஷனகா, சதுரங்கா டி சில்வா, பதிரனா, தனஞ்ஜெயா டி சில்வா, நூவன் பிரதீப், விஷ்வா பெர்னான்டோ, துஷ்மந்தா சமீரா.

source:     dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்