இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம்! 3 குழந்தைகளை இழந்த டென்மார்க்கின் நம்பர் 1 பணக்காரர்!
இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆண்டர்சன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன் என்பவர் டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார். சுமார் 50 ஆயிரம் கோடிக்கு சொந்தகாரரான இவர், ஈஸ்டர் பண்டிகைக்காக இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில், ஆன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளதாக, அவரது நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் மகள், மருமகன் மற்றும் இரு பேரன்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், ஷேக் சலீமின் மருமகன் மொஷியுல் ஹக் சவுத்ரி படுகாயம் அடைந்தார். இரு பேரன்களில் ஜயான் சவுத்ரி என்பவர் காணவில்லை என கூறப்பட்ட நிலையில், அச்சிறுவன் தாக்குதலில் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொஷியுல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பலியான சிறுவன் ஜயானின் உடல் கொழும்புவிலிருந்து வங்கதேசம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.