புதுக்கோட்டை மாவட்டம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி !
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியில் உள்ள புலியூர், வீரப்பட்டி, கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், கிள்ளனூர், காட்டுக்கோட்டைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த போவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் அப்பகுதியில் நேற்று அதிகாலை முதலே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந் நிலையில் புலியூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வாலிபர்கள் வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து குவிந்தனர்.
இதற்கிடையில் புலியூர் பகுதியில் ஓரிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலை நேற்று அதிகாலை போலீசார் அகற்றினர். பின்னர் மற்றொரு கரையில் பனைமரங்களால் வாடிவாசல் அமைத்து காளை மாடுகளை அவிழ்த்து விட வாலிபர்கள் முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் ராயப்பன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் குவிந்திருந்த வாலிபர்களை அடித்து விரட்டினர். இதனால் வாலிபர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இதைத்தொடர்ந்து பனைமரங்கள் அமைத்து கட்டப்பட்டிருந்த வாடிவாசலை போலீசார் மினிவேனில் கயிற்றை கட்டி அகற்றினர்.
இதேபோல வீரப்பட்டி, கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், கிள்ளனூர், காட்டுக்கோட்டைப்பட்டி, தென்னூர் போன்ற பகுதிகளில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பும், பதற்றமும் நிலவியதால் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு உத்தரவின் பேரில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.