நாமக்கல்லில் வேளாண்துறை கண்காட்சி-கருத்தரங்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

Default Image

நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் “வருடம் ஒரு கன்று- கறவைமாடுகளில் கருத்தங்காமை பிரச்சினைகளுக்கான தொழில்நுட்ப மேலாண்மை உத்திகள்” குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா அனைவரையும் வரவேற்று பேசினார். கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனங்கள், தீவன புற்கள், கால்நடை இனபெருக்க முறைகள், தாது உப்புக் கலவை, பால் கறவைக் கருவிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. ஏராளமான விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான விளக்கங்களை கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து கறவைமாடுகளில் கரு தங்காமை பிரச்சினைகளுக்கான தொழில்நுட்ப மேலாண்மை உத்திகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்தியில் முதன்மையான முன்னோடி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. கால்நடை வளர்ப்பு தொழிலில் நாமக்கல் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பை அதிகரிக்கவும், பால் உற்பத்தியை பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்திட கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் கால்நடை வளர்ப்போரின் பல்வேறு கோரிக்கைகளும், குறைகளும் கேட்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றது.

நாமக்கல், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் பங்கு முழுமையாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பெரும் அளவில் ஆவின் நிறுவனத்திற்கே தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை வழங்கி வருகின்றனர். அவ்வாறு வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான தொகை 15 முதல் 20 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் பேசினார். பின்னர் அவர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கருத்தரங்கில் கால்நடைகள் வருடம் ஒரு கன்று பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள், நீடித்த லாபகரமான கறவைமாடு வளர்ப்பிற்கான பாரம்பரிய மருத்துவ முறைகள், கறவைமாடுகளில் லாபத்தை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கறவைமாடுகளில் மலட்டுத்தன்மையை நீக்கும் தொழில்நுட்பங்கள், கறவை மாடுகளுக்கான தீவனம் மற்றும் இனப்பெருக்க மேலாண்மைக்கான உத்திகள் குறித்து வீடியோ விளக்க படங்களுடன் கால்நடைத் துறை பேராசிரியர்கள் விளக்கங்கள் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை இனபெருக்கம் மற்றும் ஈனியல் துறை உதவி பேராசிரியர் செந்தில்குமார், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை முதுநிலை கண்டுபிடிப்பு அலுவலர் விஞ்ஞானி ரவிகுமார், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை அறிவியல் உதவி பேராசிரியர் ஜோதிலட்சுமி, கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குனர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்