கரூர் மாவட்டம் அருகே விவசாயிகள் சாலை மறியல்!
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள போத்துராவுத்தன்பட்டி, பஞ்சப்பட்டி, பாப்பக்காபட்டி, சிவாயம், வயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விளை நிலத்தில் எள் விளைச்சலில் அதிக அளவு மகசூல் கிடைத்தது. இதனால் கடந்த வாரம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு எள் மகசூல் அதிக அளவு கிடைத்துள்ளது. இதனால் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த எள்ளை நல்ல விலைக்கு விற்பனை செய்து தர கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து பஞ்சப்பட்டி அருகே உள்ள வடுகபட்டியில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் மூலம் தற்காலிகமாக ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் எள் பயிரிட்ட விவசாயிகள் தங்களிடம் இருக்கும் எள் மூட்டைகளை நேற்று விற்பனை செய்யலாம் என்று வேளாண்மை துறை மூலம் அறிவிப்பு விடப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 81 விவசாயிகள் தங்களிடம் இருந்த 200-க்கும் மேற்பட்ட எள் மூட்டைகளை வடுகபட்டியில் உள்ள வேளாண்மை துறையின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து அடுக்கி வைத்தனர்.
ஆனால் 6 எள் வியாபாரிகள் மட்டுமே விவசாயிகள் கொண்டு வந்த எள்ளை வாங்க வந்தனர். மேலும் வியாபாரிகள் எள் மூட்டை ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை குறைந்த விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சி மார்க்கெட்டில் எள் மூட்டை ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வரை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் வேளாண்மை துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு குறைந்த அளவே எள் மூட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இனால் தங்கள் கொண்டு வந்த எள் மூட்டைகளுக்கு அதிக விலை கேட்டும், குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவதை கண்டித்தும் வடுகபட்டியில் உள்ள பஞ்சப்பட்டி- குளித்தலை சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வேளாண்மை வணிக துறை துணை இயக்குனர் வளர்மதி, வேளாண்மை அலுவலர் ஜெயந்தி, உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், பஞ்சப்பட்டி வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வருகிற 19-ந் தேதிக்கு மேல் மற்றொரு நாள் விவசாயிகளின் எள் மூட்டைகளின் விற்பனையை தள்ளி வைப்பதாகவும், அன்று அதிகமான எள் வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதனால் அன்று எள் மூட்டைகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பஞ்சப்பட்டி- குளித்தலை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.