வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம் – தலைமை தேர்தல் அதிகாரி
வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக இதுவரை ரூ.122.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை தங்கம் 812 கிலோ, வெள்ளி 482 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றே மாற்றப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும்.அறிக்கை அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தல் குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.