புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி-உளறலை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்
புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தவறுதலாக பேசினார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது.தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.அதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.மேலும் கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தவறுதலாக கூறினார்.பின்னர் சுதாரித்த பிரேமலதா தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சரியாக கூறினார்.மேலும் பேசிய அவர்,புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என்று தவறுதலாக பேசினார்.இது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் நேற்று அதிமுகவின் ஆரணி தொகுதி மக்களவை வேட்பாளார் செஞ்சி சேவல் ஏழுமலையை ஆதரித்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ் .அப்போது கூட்டத்தில் பேசுகையில் , திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று ராமதாஸ் தவறுதலாக கூறினார்.பின்னர் சுதாரித்த அவர் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சமாளித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.