ஈரோடு பொன்காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்
பொன்காளி அம்மன் திருக்கோவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் தலையநல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. வருடம் தோறும் பங்குனி மாதம் இக்கோவில் திருவிழா நடைபெறுகிறது.
இக்கோவில் விழாவின் சிறப்பாக புதன் கிழமை இரவு நடைபெறும் குதிரை துளுக்குபிடித்தல், தேர் இழுத்தல், தீப்பந்தம் பிடித்தல் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடை பெறுகிறது.
தேர் திருவிழா :
ஈரோடு மாவட்டம் பொன் காளியம்மன் கோவிலில் வருடந்தோறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆரம்பமானது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த 24-ந் தேதி சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி 25-ந் தேதி நடந்தது.
26-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்கள். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதற்கு பிறகு பொன்காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. தேர்த்திருவிழா நேற்று அதிகாலை 4 மணி அளவில் நடந்தது. பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதிஉலா வந்து தன்னுடைய பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனர்.
மேலும் இந்த தீப்பந்தம் வெளிச்சத்தில் அம்மனுடைய தேர், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.இந்த வீதிஉலா இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. சிவகிரி வேலாயுதசாமி கோவிலை அம்மனின் தேர், சென்றடைந்ததும் விழா நிறைவு பெறும்.