கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை!!சினிமா, அரசியல் என இரண்டு பாதைகளில் செல்கிறார்!! குமாரவேல் சாடல்
- மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை நாளை மறுநாள் வெளியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கினார்.
கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில் இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்தார்.அதேபோல் மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.
மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை நாளை மறுநாள் வெளியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கினார் .மேலும் கடலூர்-நாகை பொறுப்பாளராக இருந்தவர் குமாரவேல் ஆவார்.
இதன் பின்னர் குமாரவேல் கூறுகையில்,யாரும் போட்டியிட முன்வராததால் கடலூரில் போட்டியிட முன்வந்தேன். கடலூரில் பணியை தொடங்கும்படி மையக்குழுவில் இருந்தவர் சொன்னதால்தான் தொடங்கினேன்.நேர்காணலில் நான் கலந்து கொண்டேன், நான் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு.கோவை சரளாவை வைத்து எங்களை நேர்காணல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கமல்ஹாசனை சூழ்ந்துள்ளவர்கள் அவருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகின்றனர்; அதை ஏற்றுக்கொண்டு கமல் செயல்படுகிறார்.
கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை.முழுநேர அரசியல்வாதியாக கமல்ஹாசன் செயல்படவில்லை. சினிமா, அரசியல் என இரண்டு பாதைகளில் செல்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது .கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்தேன்.