அரசியல்வாதிகள் நம்மை ஆள தகுதியற்றவர்கள் : விசால் ஆவேசம்
ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று அனிதா தற்கொலை குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலை குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன். அனிதா தான் பாதிக்கப்பட்டது போல பிற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீதிமன்ற படிகளில் ஏறிப் போராடியவர். நேற்று ஒரு வார இதழில் அனிதா பற்றி எழுதியிருந்ததை படித்து மிகுந்த பெருமைப்பட்டவனை இன்று வேதனைக்குள்ளாக்கி விட்டாள் அனிதா.
196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும் கூட அனிதா மருத்துவ படிப்புக்கு தகுதியடையவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மக்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். இனி தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் எங்களுக்காக ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும்.
இப்படி நீட் தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட, அனிதாவைப் போன்ற தம்பி தங்கைகளுக்கு ஒரு கோரிக்கை. தயவு செய்து இது போன்ற தவறான முடிவு எடுக்காமல் என்னைப் போன்றவர்களை ஒரு சகோதரனாக நினைத்து அணுகினால் படிப்புக்குண்டான உதவிகளை செய்துதர தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.