மம்தா அரசு VS மத்திய அரசு -இன்று உச்சநீதிமன்றம் விசாரணை
காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது சிபிஐ மனு.
நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க, அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது, காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்தார்.
சிபிஐ மூலம், மத்திய அரசு தங்களை மிரட்ட முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பதட்டமான சூழ்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ், அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.மேலும் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்தது சிபிஐ .
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் மேற்கு வங்கத்தில் நிலவும் சூழலை கேட்டறிந்த நீதிபதிகள், காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆதாரங்களை அழித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இன்று விசாரணைக்கு ஒத்தி வைத்தனர்.