மக்கள் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் பூச்சொரிதல் விழா..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகின்றது.கோவிலின் மாசித்திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது.
பூச்சொரிதல் மற்றும் சாட்டுதல் கொடியேற்றம் என பல பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் வழக்கமாக நடைபெறும்.இந்த வருடத்திற்கான மாசித்திருவிழாவானது நேற்று முன்தினம் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் விழாவானது நேற்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு காலை 6 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது .
சரியாக 8.30 மணி அளவில் அக்கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்து அதன் பின் பூக்களை அம்மனுக்கு படைத்து பின்னர் அந்த பூக்களை கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்தனர்.அத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், முருகன் மற்றும் விழா நாயகியான கோட்டை மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் வீற்றிருந்தனர்.