கோவில்பட்டியில் பிள்ளையார்நத்தம் கண்மாய் உடைந்து வீணாகும் தண்ணீர் ..!
கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இரவு வரை நீடித்த மழையால் நகரிலுள்ள தெருக்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இங்கு 56 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி இருந்தது.
பலத்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரைபுரண்டு ஓடிவந்த மழை தண்ணீர் சுமார் 46 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில்பட்டி பிள்ளையார்நத்தம் கண்மாய் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகாலையில் நிரம்பியது. கண்மாயின் கரையில் காலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, பிச்சைதலைவன்பட்டியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
உடனே பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கண்மாய் கரையின் உடைப்பை அடைத்து, கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிமுடியும் வரை அதிகாரிகள் யாரும் கண்மாயின் கரை உடைப்பை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கண்மாயில் ஏற்பட்ட கரை உடைப்பால், பெரும்பாலான தண்ணீர் வெளியேறி வீணாகி விட்டது