இன்றிரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்-ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றிரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.8-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றிரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்.பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மைகல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதியை பெற வேண்டும். முதன்மை கல்வி அலுவலரால் பணியாணை வழங்கப்படும் இடத்தில் ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.