உறவில் மகிழ்ச்சியான சூழலை மேற்கொள்ள உதவும் சில வழிகள்!
உறவில் இருக்கும் நபர்கள் தங்களது துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். காதல் உறவாயினும் சரி, திருமண உறவாயினும் சரி, அதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல், துணையை நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த பதிப்பில் உறவில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதுவும் கடந்து போகும்
உறவில் உங்கள் துணை செய்த பிரச்சனையை நினைவில் வைத்து, அதைப்பற்றியே பேசி அவர் மனதை புண்படுத்தாமல், அதை மறந்து வாழ முயலுங்கள்; மேலும் இதுவும் கடந்து போகும் என்ற வாக்கியத்தை நினைவில் கொண்டு, உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் தற்காலிகமானதே என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை வாழுங்கள்.
கடந்த காலத்தை மறக்க
கடந்த கால மோசமான சம்பவங்களை, அப்பொழுது செய்த தவறுகளை மறந்து வாழ்ந்தால், வாழ்க்கையில் பிரச்சனை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. மேலும் கடந்த கால நினைவுகளை நினைத்து இன்று கையில் இருக்கும் நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழாமல் விட்டு விடாதீர்.
உங்கள் துணை புரியும் தவறுகளை மற்றும் அவர்களின் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சுய அலசல் & காதல்
உங்களை நீங்களே நேசித்தால் தான், உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்; உறவில் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது முதலில் சுய அலசல் புரிந்து பின் துணையுடன் பிரச்சனையைக் குறித்து பேசி தீருங்கள்.
உதாரணம்/ரோல் மாடல்
இவர்களைப் போல் நாம் ஒற்றுமையாக, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்வில் நீங்கள் சந்தித்த ஒரு வெற்றிகரமான – மகிழ்ச்சியான ஜோடியை உங்கள் வாழ்வின் முன்மாதிரியாக கொண்டு, உறவை மேம்படுத்தலாம்.
தீர்வு
உறவில் ஏற்படும் பிரச்சனையை – சண்டை போட்டு, அதை பெரிதாக்குவதை விடுத்து அந்த பிரச்சனைகான தீர்வை சிந்தித்து, ஏற்பட்ட பிரச்சனையை போக்க முயலுங்கள். யார் என்ன தவறு செய்தாலும், அதற்கான தீர்வை முதலில் யோசித்து உண்டான பிரச்சனையை தீர்க்க முயலுங்கள்.
உங்களுக்கான நேரம்
உறவில் என்னதான் ஈடுபாட்டுடன் இருந்தாலும், உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, உங்களுக்கு இஷ்டமான விஷயங்களை செய்யுங்கள்; பிடித்த இடங்களுக்கு சென்று வாருங்கள். நீங்கள் நலமாக, மகிழ்ச்சியாக இருந்தால் தான், உங்களை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.