பிரதமர் வருகை:விழா நடைபெறவுள்ள இடத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள இடத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சியால் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதற்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகள், 100 மருத்துவ படிப்பிற்கான இடங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.
விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள இடத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.