ரஃபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்…!!
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூறி கடந்த மாதம் 14-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசு வழங்கிய தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். விரைவில் இம்மனு விசாரணைக்கு வர உள்ளது.