பதிலளிக்காத பிரதமர்…கேள்விகளை ஆய்வு செய்யும் பிஜேபி-யினர்…ராகுல் கிண்டல்..!!
பிரதமர் நரேந்திர மோடி, நடுத்தர வர்க்கத்தினரின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.சமீபத்தில் கூட பிரதமர் மோடி புதுச்சேரி பிரதேச பிஜேபி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனை கூட்டத்தில் , பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், நடுத்தர வர்க்கத்திடமிருந்து வரி வசூலிப்பதில் தீவிரமாக இருக்கும் அரசு, ஏன் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் பிரதமர் மோடி , சிறிய தயக்கத்திற்கு பின்பு வணக்கம் புதுச்சேரி என்று கூறி சென்றுவிட்டார். இது ஊடகங்களிலும் , சமூக வலைத்தளத்திலும் வைரலாகியது.
இந்த காணொளி உரையாடல் நிகழ்ச்சியில் பதில் பேசாமல் சென்ற பிரதமர் மோடி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் , பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.நடுத்தர மக்களின் பிரச்சனை , சிரமத்தை பற்றி பிரதமரிடம் கேட்டால் இது தான் பிரதமரின் பதில் என்று சுட்டிக்காட்டி ராகுல் ட்வீட் செய்துள்ளார்.இச்சம்பவத்தை தொடர்ந்து பிஜேபி கட்சி நிர்வாகிகளின் கேள்விகளை பா.ஜ.க. ஆய்வு செய்து வருவதாகவும் ராகுல் காந்தி மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்..